மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, மும்பை மாநகராட்சியை இக்கூட்டணி கைப்பற்றுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற நிலையில், இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதியம் நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 2,869 வர்டுகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி 1,145 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு)-மகாராஷ்டிரா நவ நிர்மாண்(எம்என்எஸ்) கூட்டணி 136 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 179 வார்டுகளிலும், சரத்பவாரின் என்சிபி 111 வார்டுகளிலும், ஏஐஎம்ஐஎம் 41 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன
தலைநகர் மும்பையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி 118 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன. இதில், பாஜக 89 வார்டுகளிலும், சிவ சேனா 29 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன்மூலம், மும்பை மாநகராட்சியை இந்த கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. சிவ சேனா(உத்தவ் தாக்கரே)-எம்என்எஸ் கூட்டணி மும்பையில் 77 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. இதில், சிவ சேனா(உத்தவ் தாக்கரே) 71 வார்டுகளிலும் எம்என்எஸ் 6 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மும்பையில் காங்கிரஸ் 7 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
நவி மும்பை மாநகராட்சியையும் பாஜக - சிவ சேனா கூட்டணி கைப்பற்றுகிறது. இக்கூட்டணி மொத்தமுள்ள 111 வார்டுகளில் 100 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. இதில், பாஜக 72, சிவ சேனா 28 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன. இங்கு சிவ சேனா(உத்தவ் தாக்கரே) 2 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
கடைசியாக 2017ல் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. ஏறக்குறைய 26 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை ஒருங்கிணைந்த சிவ சேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், தற்போது அது பாஜக - சிவ சேனா கூட்டணி வசம் சென்றுள்ளது.
தானே, நாஷிக், புனே, பிம்ப்ரி சின்ச்வாட், பன்வெல், கல்யாண்-டோம்பிவல்லி, மீரா பையாந்தர், உல்ஹாஸ்நகர் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பாஜக - சிவ சேனா கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.