டேராடூன்: உத்தராகண்டில் சார் தாம் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கங்கோத்ரி கோயில் நிர்வாகக் குழுவின் தீர்மானத்தின் படி, இந்து அல்லாதவர்கள் ‘பஞ்சகவ்யம்’ உட்கொண்டால் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, பசுவின் சிறுநீர் உள்ளிட்ட பொருட்கள் கலந்த பஞ்சகவ்யத்தை உட்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கங்கோத்ரி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பசுவின் பால், தயிர், நெய், கோமியம் (பசுவின் சிறுநீர்) மற்றும் பசுவின் சாணம் ஆகிய 5 பொருட்களுடன் கங்கை நீரும் கலந்த கலவையே பஞ்சகவ்யம் ஆகும்.
இதுகுறித்து யமுனோத்ரி கோயில் நிர்வாக செய்தித் தொடர்பாளர் புருஷோத்தம் உன்னியல் கூறும்போது, “நாங்கள் பல காலங்களாக பஞ்ச கவ்ய பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறோம். சனாதனத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர்களின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, சனாதனிகள் மட்டுமே சன்னதியில் தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை அனுமதிக்கும்” என்றார்.