புதுடெல்லி: காப்பீடு தொகை ரூ.50 லட் சத்தை பெறுவதற்காக ஜவுளிக்கடை பொம்மையை எரிக்க முயன்று 4 பேர் கைதாகியுள்ளனர்.
உ.பியின் புனித நகரங்களில் ஒன்றாக இருப்பது கடுமுக்தேஷ்வர். இங்கு ஓடும் கங்கை நதியின் கரையிலுள்ள பிரிஜ்காட் எனும் சுடுகாடு வாராணசியைப் போல் பிரபலமானது. இங்கு நேற்று முன்தினம் ஒரு கும்பல் ஒரு பொம்மையுடன் இறுதிச் சடங்கு செய்ய வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள், இறந்தவரின் உடல் காரில் இருப்பதாகக் கூறி அதற்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இறுதியில் காரிலிருந்து உடலை எடுப்பதற்கு உதவியப் பண்டிதர் காந்த் மிஸ்ராவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. துணியால் மூடப்பட்டிருந்த உடலின் எடை லேசாக இருந்தது. இதுகுறித்து காந்த் மிஸ்ரா கேட்டதற்கு, இறந்தவர் வெகுநாட்களாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார் என கூறியுள்ளனர்.
சிதையில் உடலை வைத்தபின் பலவந்தமாகத் துணியை அகற்றிப் பார்த்த பண்டிதர்களுக்கு அதிர்ச்சி. அதில் ஜவுளிக் கடை பொம்மை இருந்தது. இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருவர் தப்பி ஓடிவிட மற்ற இருவரை இதர பண்டிதர்களுடன் சேர்ந்து பிடித்த காந்த் மிஸ்ரா, அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ரூ.50 லட்சம் காப்பீடு தொகை பெறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அதன்பின்னர் தப்பியோடிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பண்டிதர் காந்த் மிஸ்ரா கூறுகையில், ‘துக்க உணர்வும் இன்றி வந்தவர்கள் உடலை எரிப்பதில் தீவிரமாக இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், துணியை அகற்றி உடலை பார்த்தோம். இல்லை என்றால், அவர்கள் பொம்மையை எரித்து விட்டு, காப்பீடு செய்யப்பட்டவருக்கு இறப்பு சான்றிதழ் பெற்றிருப்பர்’’ என்றார். இது போன்ற காப்பீடு மோசடிகள் வட மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.