கோப்புப் படம்
புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி என சுருக்கமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள்) திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இந்த புதிய மசோதாவின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள்) திட்டத்தின் பெயர் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) [Viksit Bharat Guarantee For Rozgar And Ajeevika Mission (Grameen)] என மாற்றப்படுகிறது. சுருக்கமாக இது VB G RAM G என குறிப்பிடப்படும்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற அனைத்து பாஜக எம்பிக்களும் அவைக்கு வர வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய மசோதாவில், வேலை நாட்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், வேலை முடிந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கப்படாவிட்டால் வேலையின்மைக்கான படி வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘‘ஒரு காலத்தில் தோல்வியின் சின்னம் என்று இந்த திட்டத்தை பிரதமர் அழைத்தார். இப்போது அந்த புரட்சிகரமான திட்டத்துக்கு பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார். இது இந்தியாவின் ஆன்மா குடியிருக்கும் கிராமங்களில் இருந்து மகாத்மா காந்தியை அழிப்பதற்கான மற்றொரு வழி.
இந்த நடவடிக்கை, இந்த திட்டம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதை மூடிமறைப்பதற்கான ஒரு வெற்று ஒப்பனை மாற்றத்தை தவிர வேறில்லை. மேலும் இந்த திட்டத்துக்கு மெதுவான மரணத்தை ஏற்படுத்துவதற்காக கவனமாகத் திட்டமிடப்பட்ட ஓர் உத்தியாக இது தெரிகிறது. உண்மையில், இந்த அரசுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நோக்கம் இல்லை’’ என குற்றம் சாட்டியுள்ளார்.