புதுடெல்லி: உத்தர பிரதேத்தின் சம்பல் மாவட்டம் பியூரா கிராமத்தில் ராம் பேத்தி தேவி எனும் மூதாட்டி நேற்று காலமானார். இவரது பிள்ளைகள் இறுதி ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்தினர். ராம் பேத்தியால் வளர்க்கப்பட்ட 2 யானைகள் இறுதி ஊர்வலத்தை வழிநடத்தின. இதன் பின்னால், ராம் பேத்தியின் உடல் சுமந்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் 100 டிராக்டர்கள் அணிவகுக்க, சிவன், கிருஷ்ணர் என இந்துக் கடவுள்களின் படங்களுடன் அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.
இத்துடன் சுமார் 1,500 உற்றார், உறவினர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் ராஜ்காட் கங்கைநதி படித்துறை வரை சென்றது. இதுகுறித்து, ராம் பேத்தி தேவியின் மகன் மன்வீர் சிங் கூறுகையில், “சுமார் 200 வருடங்களாக எங்கள் குடும்பத்தினர் யானைகளை வளர்த்து வருகிறார்கள். இதனால், எங்களை ‘யானைக் குடும்பம்’ என இப்பகுதியில் அழைப்பது வழக்கம்.
கடைசியாக இருந்த மோகன் மற்றும் பர்மா ஆகிய இரண்டு யானைகளையும் எங்கள் தாய் மிகவும் பாசமாக வளர்ந்து வந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு, அந்த இரண்டு யானைகளும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தன. யானைகள் மீது அவை வைத்திருந்த பாசத்தை உணர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தை இதுபோல் ஏற்பாடு செய்தோம்” என்றார்.