புது டெல்லி: மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், நாட்டில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரம் போன்றவற்றின் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று மூத்த அமைச்சர்களுடன் உயர்நிலைக் குழு கூட்டத்தை நடத்தினார்.
இந்தியாவின் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் புது டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் எரிபொருளின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. நுகர்வோர் மற்றும் தொழில்துறை நலன்களைப் பாதுகாப்பதற்காக, போதுமான எரிபொருள் இருப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது என்றும், பீதியில் நடந்த எல்பிஜி முன்பதிவுகளும் குறைந்துள்ளன என்றும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற முக்கியத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்து வணிக எல்பிஜி ஒதுக்கீட்டை அரசு அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை விற்பனையை கட்டுப்படுத்த, மாநிலங்கள் முழுவதும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர் என்று இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.