மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
புதுடெல்லி: நாட்டில் புதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு நேற்று முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கான விதிமுறைகள் அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து, புதிதாக 4 புதிய தொழிலாளர் சட்டங்களை (Labour Codes) அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தொழிலாளர் சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய சட்ட கட்டமைப்பு, பல தசாப்தங்களாக பழமையான, சிதறியுள்ள விதிகளை சுலபமாக்குதல், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துதல், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துதல், தொழிலாளர் நடைமுறைகளை உலகளாவிய சிறந்த முறைகளுக்கு இணையாகக் கொண்டு வருதல் ஆகியவற்றை முதன்மை இலக்காக வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஊதிய சட்டம்-2019, தொழில்துறை உறவு சட்டம்-2020, சமூகப் பாதுகாப்புக்கான சட்டம்-2020, சுகாதாரம், பாதுகாப்பு, பணி நிலைமைச் சட்டம்-2020 ஆகிய 4 புதிய சட்டங்கள் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த சட்ட மசோதாக்கள் நான்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படாமல் இருந்தன.
இந்நிலையில் நேற்று முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதுதொடர்பான விதிமுறைகள் அடுத்த வாரத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.