ஆஷிஷ் பானர்ஜி

 
இந்தியா

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை

‘நான் ஊழல்வாதி அல்ல’ என்ற குறிப்பு கண்டெடுப்பு

வேட்டையன்

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டது. நேற்று உள்ளூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அவர், தேசியக் கொடியை ஏற்றி இருந்தார்.

74 வயதான அவர், ராம்பூர்ஹாத் தொகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2001 முதல் 2026 வரையில் சுமார் 25 ஆண்டு காலம் அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர். கடந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அவர், தோல்வி அடைந்தார். தற்போது அந்த தொகுதியில் பாஜக-வை சேர்ந்த த்ரூபா சாஹா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு அடங்கிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில், “நான் ஊழல்வாதி அல்ல. எனது பொது வாழ்வு முழுவதும் நான் ஊழல் செய்தது கிடையாது” என்று ஆஷிஷ் பானர்ஜி குறிப்பிட்டுள்ளதாக தகவல். தாராபித் ராம்பூர்ஹாத் மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

‘பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’

ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை மரணத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி குணால் கோஷ் வலியுறுத்தி உள்ளார்.

“ஆஷிஷ் பானர்ஜி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தற்கொலை என்றும், தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் முறையான விசாரணை வேண்டும். அதுவும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஒருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே அவரை அவதூறாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கும் செயலை பாஜக திட்டமிட்டு செய்தது. அதன் விளைவாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான இந்த அரசியல் யுத்தத்தில் மம்தா தலைமையில் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என்று குணால் கோஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT