நரேஷ் குஜ்ரால்
புதுடெல்லி: வாட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் மகன் நரேஷ் குஜராலிடம் ரூ.7.68 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 1997 முதல் 1998-ம் ஆண்டு வரை நாட்டின் 12-வது பிரதமராக ஐ.கே.குஜ்ரால் பதவி வகித்தார். இவரது மூத்த மகன் நரேஷ் குஜ்ரால். கடந்த 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை சிரோமணி அகாலி தளம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தார். தற்போது டெல்லியில் ஜவுளி, தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது வாட்ஸ் அப் கணக்கை ஒரு கும்பல் அண்மையில் ஹேக் செய்துள்ளது.
பின்னர் அவரது வாட்ஸ் அப்பில் இருந்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சுபம் சிங்குக்கு கடந்த 12-ம் தேதி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.7.68 கோடியை ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. உடனடியாக தலைமை நிதி அதிகாரி சுபம் சிங், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.7.68 கோடியை அனுப்பினார்.
அதன்பின்னர்தான் ரூ.7.68 கோடி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், டெல்லி சைபர் கிரைம் போலீஸார் ரூ.4.28 கோடியை மீட்டனர்.இதுகுறித்து டெல்லி இணை ஆணையர் வினித் குமார் கூறும்போது, “இந்த மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடியாக மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. சமூக வலைதளங்கள் வாயிலாக வரும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது அவசியம்" என்று தெரிவித்தார்.