இந்தியா

எஸ்ஐஆர் சரிபார்ப்பில் சான்று கேட்பு: முன்னாள் அதிகாரி அதிருப்தி

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணியின்போது தேசிய அடையாளச் சான்று கேட்கப்பட்டதால் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி நவ்தீப் புரி அதிருப்தி அடைந்துள்ளார்.

எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் நவ்தீப் புரி (1983 - 2019 பணிப்பிரிவு). 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றிய இவர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக, தனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் (பிஎல்ஓ) சமர்ப்பித்துள்ளார்.

அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதாக அதிகாரிகள் தொடக்கத்தில் உறுதி அளித்துள்ளனர். ஆனால், 2003-ம் ஆண்டின் சிறப்புத் தீவிர திருத்தப் பதிவுகளுடன் இவரது தற்போதைய விவரங்கள் ஒத்துப்போகவில்லை. இதனால், நவ்தீப் புரி இந்தியக் குடிமகன் தானா என்பதை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆவணங்களுடன் நேரில் வருமாறு அதிகாரி தகவல் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "2003-ம் ஆண்டில் நான் இந்தியாவில் இல்லாததால், பாஸ்போர்ட்டை ஆதாரமாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளேன். மூன்று நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய எனக்கே குடியுரிமையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டால், நாட்டின் சாமானிய குடிமகனின் நிலை என்ன வாகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT