புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பெரும்தொகை சிக்கிய வழக்கில் அவர் குற்றவாளி என்று மக்களவை விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மார்ச் 14, 2025 அன்று டெல்லியில் உள்ள நீதிபதி வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து தீயை அணைக்க டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது, நீதிபதி வர்மாவின் வீட்டில் உள்ள பொருட்கள் வைக்கும் அறையில் பெருமளவிலான எரிந்த மற்றும் அரைகுறையாக எரிந்த ரூ.500 நோட்டுக் கட்டுகள் குவிந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து நடந்த அறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று நீதிபதி வர்மா தெரிவித்தார். மேலும், நீதிபதியின் உதவியாளர்கள் முன்னிலையில் அறை சுத்தம் செய்யப்பட்டு, பணமும் மாயமானது.
விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என்று அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதனிடையே, வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
மார்ச் 22, 2025 அன்று, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார்.
இக்குழு சாட்சிகளை விசாரித்து மே 2025-ல் சமர்ப்பித்த அறிக்கையில், பணம் வைக்கப்பட்டிருந்த அந்த அறை நீதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்றும், குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது என்றும் உறுதி செய்தது.
இந்நிலையில், நீதிபதி வர்மாவைப் பதவி நீக்கம் செய்யக் கோரி செப்டம்பர் 2025-ல் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையில் விசாரணைக் குழுவை ஓம் பிர்லா அமைத்தார். இந்தக் குழுவால் நவம்பர் 26 அன்று அவர் மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அவர் பதவி விலகினார்.
மேலும், விசாரணைக் குழுவை எதிர்த்து நீதிபதி வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லி காவல் துறை, சிஆர்பிஎப் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் மார்ச் 13 முதல் 17 வரை விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் சாட்சியப் பதிவுகளும் நிறைவடைந்தன.
இதன் தொடர்ச்சியாகவே, 2 தொகுதிகள் கொண்ட முழுமையான விசாரணை அறிக்கையை விசாரணைக் குழு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று சமர்ப்பித்தது.
அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் அவருக்கு சொந்தமானது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரை செய்துள்ளது.