ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன், சொத்துக்குவிப்பு வழக்கை 2011-ம் ஆண்டு முதல் எதிர்கொண்டு வருகிறார். இவ்வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரின் சில சொத்துகளை முடக்கியது மட்டுமல்லாது இவரை கைதும் செய்தனர்.
இதனை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி 16 மாதங்கள் வரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர், 2019-ல் ஆந்திர முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், அரசு பணிகளை பார்க்க நேரம் சரியாக இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க ஜெகன் கோரினார்.
கடந்த 2024-ல் நடந்த பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 6 ஆண்டுகளுக்கு பிறகு, ஜெகன்மோகன் ரெட்டி நாம்பல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.