மாஸ்கோ / புதுடெல்லி: மாஸ்கோவில் ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கான்பூரைச் சேர்ந்த இந்தியப் பொறியாளர் ஒருவரை, அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த பொறியாளர் சந்தன் குப்தா, நொய்டா நிறுவனமான ஃபிளெக்ஸ் ஃபிலிம்ஸின் மாஸ்கோ கிளையில் பணியாற்றி வருகிறார். தனது மனைவி ஸ்நேகா குப்தா மற்றும் 10 வயது மகனுடன் அவர் மாஸ்கோவில் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இரவு, மாஸ்கோவின் சிவப்பு சதுக்க பகுதியில் பொது இடத்தில் மது அருந்தி, ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்ததாக சந்தன் குப்தா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் இருவரையும் ரஷ்ய காவல்துறையினர் கைது செய்தனர்.
தனது கணவர் எந்தத் தவறும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய ஸ்நேகா குப்தா, உக்ரைன் போரில் பங்கேற்க அவரை ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். தன் கணவரைப் பாதுகாப்பாக மீட்க பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கண்ணீருடன் காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து தகவல் தெரிவித்த அரசு வட்டாரங்கள், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் சந்தன் குப்தா மற்றும் ஆஷிஷை விடுவிக்க உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், அவர்களைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தன.
நல்ல வேலை தருவதாகக் கூறி ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படும் சூழல் நிலவுவதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. இதுவரை ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 227 இந்தியர்களில் 139 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.