மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்.

 
இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு - பல கிராமங்கள் துண்டிப்பால் 3,000 பேர் பாதிப்பு

மோகன் கணபதி

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் சியாங் மாவட்டம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நெல் வயல்கள், வீடுகள் உள்ளிட்ட தனியார் சொத்துக்கள், பாலங்கள், சாலைகள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளதாக மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆகஸ்டி ஜமோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லோயர் சியாங் மாவட்டம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள டபிர்போ சாகு, லோக்லு, ரோட்டே, ராமே, கோயு உள்ளிட்ட கிராமங்களில் சாலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இதுவரை உயிரிழப்போ, காயங்களோ இதுவரை பதிவாகவில்லை. ராணுவம், இந்தோ - திபெத் எல்லை போலீஸ், இந்திய ராணுவத்தின் எல்லை சாலை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளைத் தொடங்கி உள்ளது. சாலைத் தொடர்பை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ரோட்டே கிராமத்தைச் சேர்ந்தவரும், குருங் குமே மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான டேவிட் கோயு, “இங்கு பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால், உள்ளூர் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். நெல் வயல்கள், தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

வளர்ப்புப் பிராணிகளான ஆடுகள், மாடுகள், பன்றிகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும், வளர்ப்புப் பறவைகளையும் ம க்கள் இழந்துள்ளனர். கிராம மக்கள் பலரும் வெளியே செல்ல முடியாமல் சிக்கி உள்ளனர். இந்த கடுமையான சூழலில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமாகின.

கிராமத்தின் தொங்கு பாலம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அணுகு சாலைகள், சிறு பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டே கிராமம் வெளியுலகத் தொடர்பின்றி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் குடிநீர் விநியோக அமைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மின் இணைப்புகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சாலைத் தொடர்பை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும், தற்காலிக பாலம் அமைக்க வேண்டும், உணவு தானியங்கள் வழங்க வேண்டும், குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை சீரமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளூர் மக்களும் மாணவர்களும் அரசிடம் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சேதங்கள் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்​களில் பாதிப்பு

வடமாநிலங்​களில் பரு​வ​மழை தீவிரமடைந்து வரு​கிறது. குறிப்பாக அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்​கிம், மேகாலயா உள்​ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வரு​கிறது. அசாமின் தேமாஜி, நல்​பாரி, திப்ரூகர், சிரங், லக்​கிம்​பூர், கோக்​ராஜார் மாவட்​டங்​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த மாவட்​டங்​களில் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வருகின்றனர். 1,690 ஹெக்​டேரில் பயி​ரிடப்​பட்டு இருந்த பயிர்​கள் சேதமடைந்து உள்​ளன.

அசாமின் அர்ச்​சிப​தார் மற்​றும் சிமென் சப்​பாரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்​றுப் பாலம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்டு உள்​ளது. இதனால் அங்கு ரயில் போக்குவரத்து முழு​மை​யாக ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மேலும் கனமழை, வெள்​ளத்​தால் வடகிழக்​கில் பல்​வேறு ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்டு உள்​ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT