இந்தியா

மேற்கு வங்கத்தில் 400 உணவகங்களில் ரூ.5-க்கு மீன்சாதம்: முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

வாரத்துக்கு இரு நாட்கள் விநியோகம்

மோகன் கணபதி

கொல்கத்தா: மக்களின் நலனுக்காக 400 பிரத்யேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் ரூ.5-க்கு மீன்சாதம் விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதல்வராக கடந்த 9-ம் தேதி சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதையடுத்து பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு வங்கத்தில் சுமார் 400 பிரத்யேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு ரூ.5 விலையில் மீன்சாத உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க மக்களின் பிரத்யேக உணவான மீன் உணவுக்கு சிக்கல் ஏற்படும் என மம்தா பானர்ஜி கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்ற அறிவிப்பையும் சுவேந்து அதிகாரி இன்று வெளியிட்டுள்ளார்.

அதோடு, இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கான விண்ணப்பங்கள் நாளை (மே 27) முதல் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் சுவேந்து அதிகாரி, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற அனைத்து இந்தியக் குடிமக்களும் தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சுகாதாரத்துறையில் இருந்து பிரித்து, தனியாக 'ஆயுஷ்' (AYUSH) துறை உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் அவர்களை நாடு கடத்துவது என்ற தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் நோக்கில், நாடு கடத்துவதற்கு முன்னதாக அவர்களை தங்க வைக்க தடுப்பு மையங்களை அமைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுவேந்து அதிகாரி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

மாநில அரசுப் பணிகளுக்கு பணியாளர்களை வெளிப்படையான முறையில் நியமிக்கும் நோக்கில், அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அரசு ஒரு புதிய ஆள் சேர்ப்பு கொள்கையை அறிமுகப்படுத்தும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

மேலும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT