புதுடெல்லி: இந்தியாவில் மீன் நுகர்வு மிக அதிகமாக உள்ள மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இங்கு அதிக நதிகள் கொண்ட பூகோள அமைப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் மீன் உணவை அதிகம் உண்கின்றனர். அசைவ உணவுப் பட்டியலில் மீன் இருந்தாலும் பிராமணர் உள்ளிட்ட சைவ உணவாளர்களும் அதை சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன் உள்ளிட்ட பெங்காலி வகை உணவு முறையை தடை செய்து விடுவார்கள் என முதல்வர் மம்தா பானர்ஜி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் புகார் எழுப்பினார். இதை மறுக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. இதனால் நேற்றுடன் முடிந்த இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்திலும் மீன் அரசியல் முக்கிய இடம் பிடித்தது.
சில நாட்களுக்கு முன், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் மீன் சாப்பிடும் காட்சிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்களில் பலர் தங்கள் கைகளில் மீன்களை ஏந்தியபடியே பிரச்சாரம் செய்தனர். போஜ்புரி மொழி திரைப்பட நாயகரும் உ.பி.யின் கோரக்பூர் எம்.பி.யுமான ரவி கிஷன் தனது பிரச்சாரக் காட்சிப்பதிவில், “தேர்தல் முடிவு வெளியாகும் மே 4-ம் தேதிக்குப் பிறகு, நீங்கள் வழக்கத்தை விட நான்கு மடங்கு மீன் சாப்பிடுங்கள்.
அனைத்து வகை மீன்களையும் நாங்கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்போம். என்டிஏ ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து மீன்களைக் கொண்டுவந்து மேற்கு வங்கக் கிணறுகள் மற்றும் குளங்களில் விடுவோம். எனவே அதிக மீன் சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது" என்றார். இந்த சூழலில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்க மக்களின் மீன் நுகர்வு குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 45.7% ஆண்களும், 35.7% பெண்களும் மீன் உண்கின்றனர். தேசிய அளவில் ஆண்களே அதிக அளவில் மீன் உண்பவர்களாக இருந்தாலும், மேற்கு வங்க நிலைமை இதற்கு மாறாக உள்ளது. இங்கு 87.8% பெண்களும், 87.4% ஆண்களும் மீன் உண்கின்றனர். இது தொடர்பான கணக்கெடுப்பு 2019, 2021-க்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டது.
ஆனால் 2015-16-ம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கு வங்கத்தில் 91.4% பெண்களும், 91.3% ஆண்களும் மீன் உட்கொண்டு வந்தனர். எனவே 2015-16-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019 -21-ல் மீன் உண்ணும் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 4% குறைந்துள்ளது.
இறைச்சி, மீன், முட்டைகளுக்காக செலவிடும் குடும்பங்களின் பட்டியலில், மேற்கு வங்கம் 2-வது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தில் உள்ளது.