இந்தியா

மேற்கு வங்க பிரச்சாரத்தில் மீன் அரசியல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்க மக்​கள் பல நூற்​றாண்​டு​களாக மீன் உணவுக்​குப் பழகி விட்​டனர். மேலும், காளி, துர்கா உள்​ளிட்ட கடவுள்​களுக்​கும் மீன் உணவு​களைப் படைக்​கின்​றனர். அங்கு மீன் உணவை சைவ​மாகக் கருதி உண்​ணும் பிராமணர்​களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் பேசுபொருளாகி உள்​ளது.

இது குறித்​து, முதல்​வர் மம்தா பிரச்​சா​ரத்​தில் பேசுகை​யில், "பாஜக ஆட்​சிக்கு வந்​தால், வங்​காள மக்​களின் உணவுப் பண்​பாடு, குறிப்பாக நமக்கு மிக​வும் பிடித்​த​மான மீன் மற்​றும் இறைச்சி உண்​ணுவதைத் தடை செய்து விடு​வார்​கள்" என்​றார். இதே கருத்தை திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மற்ற தலை​வர்​களும் மீன் உணவைப் பயன்​படுத்தி பாஜகவை விமர்​சிக்​கின்​றனர்.

          

இதற்கு பதிலடி​யாக மீன் உணவைப் புகழ்ந்​தும், பாரம்பரியத்தைப் போற்​றி​யும் பாஜக பிரச்​சா​ரம் செய்​கிறது. மாநிலத்​தின் பல்​வேறு பகு​தி​களில் பாஜக வேட்​பாளர்​கள் மீன் சந்தைகளுக்​குச் செல்​வதும், மீன் வாங்​கு​வதும், அதைப் பொது​ வெளி​யில் உண்​ப​தை​யும் வழக்​க​மாக்கி கொண்​டுள்​ளனர்.

மாநில பாஜக​வின் மூத்த தலை​வரும், கரக்​பூர் நகர தொகுதி வேட்பாள​ரு​மான திலீப் கோஷ், மீன் உணவு மீதுள்ள ஆர்​வத்தை வெளிப்​படை​யாக பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். இவர் பாஜக​வின் தாய் அமைப்​பான ஆர்​எஸ்​எஸ் பிரச்​சா​ரக​ராக இருந்​தவர். சமீபத்தில் திலீப் கோஷ் கரக்​பூரில் உள்ள ஒரு மீன் சந்​தை​யில் விற்​பனை​யாளர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

அது தொடர்​பான புகைப்​படங்​களை​யும் அவர் தன் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்​ளார். பிதான் நகர் தொகுதி வேட்​பாளர் சரத்வத் முகர்ஜி சமீபத்​தில் ஒரு பெரிய கட்லா மீனை கையில் ஏந்தி வீதி​களில் நடத்​திய பிரச்​சா​ரம் வைரலானது. அதே​போல், கொல்​கத்​தாவை ஒட்​டி​யுள்ள ராஜர்​ஹாட்​-கோ​பால்​பூர் தொகுதி பாஜக வேட்​பாளர் தருண்​ஜோதி திவாரி, மீன் சந்​தைக்​குச் சென்று பிரச்​சா​ரம் செய்​ததுடன், அங்கே மீன் சாதம் சாப்​பிட்​டுக் கொண்டே பேட்​டியளித்​தார்.

இதனால் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யினரின் தேர்​தல் வியூ​கம் பிசுபிசுத்து வரு​கிறது. எனினும், மீன் விவ​காரத்​தில் பாஜக செய்​வது போலித்​தனம். இதை நம்ப வேண்​டாம் என்று ஆளும் திரிண​மூல் கட்​சி​யினர்​ பிரச்​சா​ரம்​ செய்​து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT