குவாஹாட்டி: அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை முகாமில், சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தனது இரு சக வீரர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டார். மேலும், மற்றொரு சிஆர்பிஎப் அதிகாரி இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.
அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்டம் கட்டிமாரியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 34-வது பட்டாலியன் முகாம் அமைந்து உள்ளது. இங்கு நேற்று காலை 7 மணி அளவில், முகாமின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த, உதவி துணை ஆய்வாளர் பல்லானி பிரேமபாரம், தனது சக ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் விஷ்ணுபிரசாத் பகேல், ராம்நவால் சிங் யாதவ் ஆகியோர் உயிரிழந்தனர்.
உதவி துணை ஆய்வாளர் காயம்
உதவி துணை ஆய்வாளர் மனே கோவிந்த் ஸ்ரீபுல் பலத்த காயமடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, பல்லானி பிரேமபாரம் முகாமில் உள்ள ஒரு படுக்கையறைக்குச் சென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.