இந்தியா

லக்னோ: பயிற்சி மைய கட்டிட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

மோகன் கணபதி

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பயிற்சி மைய கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் மாணவர்களுக்கான அனிமேஷன் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இந்தக் கட்டிதத்தில் செல்ல பிராணிகளுக்கான கடை உள்ளிட்ட பிற கடைகளும் இதில் இயங்கி வந்துள்ளன.

இந்நிலையில், இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து வேகமாக கட்டிடம் முழுவதற்கும் பரவியது. பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் பலர் இந்த தீ விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களில் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். மேலும், பலர் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீ அணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கட்டிடம் முழுவதும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரஜேஷ் பதக், “இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து கேஜிஎம்சி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிப்பதே எங்கள் முன்னுரிமை. தீ விபத்து எப்படி, ஏன் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் விசாரணை அறிக்கைக்குப் பிறகே தெரிய வரும்.

சம்பவ இடத்தில் தேடுதல் பணியை அதிகாரிகள் முடித்துவிட்டனர். மாணவர்கள் வேறு யாரும் உள்ளே சிக்கி இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேவையான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இதனிடையே, ஒரு மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், சில மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “இது மூன்று மாடி கட்டிடம். மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாகப் பரவியது. மீட்புப் பணிகளின்போது சில ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. ஐந்து முதல் ஏழு மாணவர்கள் கிழே குதித்தனர். அவர்களில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது” என தெரிவித்தார்.

விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் ஆறுதல்

இந்த தீ விபத்து குறித்து அறிந்தவுடன் லக்னோவில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் கேஜிஎம்யூ மருத்துவமனைக்கு நேரில் வந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்தார். மேலும், இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், லக்னோ விரைந்துள்ளார். அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் அவர் சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT