பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பரிசாஹி கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் பெஹரா என்ற கொத்தனார், தனது இரண்டரை வயது ஆண் குழந்தையை விற்க ஒரு நபருடன் பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில், சிமினிபதி பகுதியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார் மல்லிக் தெரிவித்துள்ளார். ரூ.1 லட்சத்துக்கு விலை பேசிய ராகேஷ், ரூ.50,000 முன்பணம் பெற்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ராகேஷ் கூறும்போது, "எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களை வளர்க்க மிகவும் சிரமமாக இருந்தது. வறுமை காரணமாகவே இந்த முடிவை எடுத்தேன். தெரிந்த நபர் ஒருவர் மூலம் ஒருவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை ஒப்படைத்தேன்" என்றார்.
காவல்துறை தரப்பில் கூறும்போது, "ராகேஷ் இரண்டு திருமணம் செய்துள்ளார். தற்போது விற்கப்பட்ட குழந்தை அவரது இரண்டாவது மனைவிக்குப் பிறந்தது என தெரியவந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் குழந்தையின் தாய் ராகேஷை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்" என்றனர்.