சவ்டேஸ்வரி

 
இந்தியா

ஆந்திரா: காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த தந்தை

செய்திப்பிரிவு

மச்சேர்லா: ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் சவ்டேஸ்வரி என்பவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4-ம் தேதி காதல் திருமணம் செய்தார்.

இதையடுத்து மகள் சவ்டேஸ்வரியை காணவில்லை என அவரது தந்தை சந்திர சீனு மச்சேர்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் கடந்த மாதம் 15-ம் தேதி சவ்டேஸ்வரியை கண்டுபிடித்தனர். அவரை மிரட்டி பெற்றோரிடம் இன்ஸ்பெக்டர் ஒப்படைத்துள்ளார்.

மூன்று நாட்களுக்குப் பின் சவ்டேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் இறந்துவிட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் கூறினார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சவ்டேஸ்வரி தற்கொலை செய்யவில்லை என்றும், தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியதால், அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சவ்டேஸ்வரியின் தந்தை சந்திர சீனு மற்றும் உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் சவ்டேஸ்வரியின் குடும்பத்தினரை காப்பாற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்றிருக்கலாம் என புகார் தெரிவிக்கப்பட்டது.

வங்கி கணக்கிலிருந்து அதிக பணத்தை சவ்டேஸ்வரியின் குடும்பத்தினர் எடுத்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்று சவ்டேஸ்வரியின் குடும்பத்தினருக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT