சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டம் பாகி கலான் கிராமத்தில், 3 மாதங்களுக்கு முன்பு ஒரே இரவில் விவசாயிகளின் நிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 15 நீர்ப்பாசன மோட்டார்கள் திருடு போயின.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில், மீண்டும் சுமார் 25 மோட்டார்கள் திருடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இது விவசாயிகளை அதிர்ச்சியிலும், தவிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ஒரு விசித்திரமான, விரக்தியான முடிவை எடுத்துள்ளனர்.
கிராமம் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், மோட்டார்களைத் திருடுவதை நிறுத்திவிட்டு, டிஜிட்டல் பேமென்ட் ஸ்கேனர் (க்யூ ஆர் கோடு) மூலம் பணம் பெற்றுக் கொள்ளுமாறு திருடர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த போஸ்டரில், குறுவை (நெல்) சாகுபடி சீசன் தொடங்கியுள்ளதால், விவசாயத்துக்கு மோட்டார்கள் அவசியம் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருட்டினால் நஷ்டத்தை சந்திப்பதற்குப் பதிலாக, தங்களுடைய உபகரணங்களைத் தொடாமல் இருந்தால், திருடர்களுக்கு நேரடியாகவே பணம் செலுத்தத் தயாராக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கத் தவறிவிட்டதாக பஞ்சாப் அரசு மீதும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.