மும்பை: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் சாலையோரக் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், திண்டோரி நகரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதே பகுதியின் இந்தூர் கிராமத்தை சேர்ந்த சுனில் தத்தாத்ரேய தர்கோடே என்பவர் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இரவு விழா முடிந்த பிறகு இவர்கள் தங்கள் காரில் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். காரை சுனில் தர்கோடே ஓட்டினார்.
இந்நிலையில் திண்டோரி தாலுகா, சிவாஜி நகர் பகுதியில் இரவு 11.30 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் விழுந்தது.
தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்தனர். பிறகு தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். கிணற்றில் கணிசமான அளவு தண்ணீர் இருந்ததால், அதனுள் மூழ்கியிருந்த காரை வெளியே எடுப்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கிரேன் உதவியுடன் கிணற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. அதிலிருந்த 9 பேரும் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்தவர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். சாலைக்கு அருகில் உள்ள கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே விபத்துக்கு காரணம் என மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார்.