புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள், அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கான செலவுகள் மற்றும் அரசு விருந்தினர்களின் உபசரிப்புக்காக 2026-27 பட்ஜெட்டில் ரூ.1,102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை, 2025-2026ல் ஒதுக்கப்பட்ட திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.978.20 கோடியை விட அதிகம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வரும் நிதியாண்டில் அமைச்சரவை செலவுகளுக்காக ரூ.620 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-25-ல் ரூ.483.54 கோடியாக இருந்தது.
இந்த ஒதுக்கீடு, கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் சம்பளம், படிகள் மற்றும் பயணச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.256.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பட்ஜெட்டில் ரூ.279.74 கோடியாக இருந்தது.
பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்துக்கான ஒதுக்கீடு முந்தைய பட்ஜெட்டில் ரூ.61.32 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.65 கோடியாக அதிகரித்துள்ளது. இதுபோல் அமைச்சரவை செயலகத்துக்கான ஒதுக்கீடும் ரூ.78 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமர் அலுவலக நிர்வாகச் செலவுகளுக்கு 2025-26ல் ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டது. இது தற்போது ரூ.73.52 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.