புது டெல்லி: கருங்கடல் பகுதியில், கப்பல்களில் வேலைக்குச் சேரும் முன் பாதுகாப்புச் சூழலை கவனமாக மதிப்பிட்டு இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘தொடரும் மோதல் காரணமாக கருங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றதாக உள்ளது. இப்பகுதிகளில் இயங்கும் அல்லது பயணிக்கும் வணிகக் கப்பல்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றன. கருங்கடலில் 2026 ஏப்ரல் முதல் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோதலால் பாதிக்கப்பட்ட கருங்கடல் பகுதியில் இயங்கும் அல்லது அப்பகுதி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்கள், அத்தகைய பணிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன் நிலவும் பாதுகாப்பு அபாயங்களை கவனமாக மதிப்பிட்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
இந்த பாதையில் பணி செய்ய விரும்புபவர்கள் பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். வேலை தேடும் இந்தியர்கள், கப்பலின் பயணப் பாதை, நிறுத்தப்படும் துறைமுகங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், காப்பீட்டு வசதி மற்றும் அவசரக்கால நடவடிக்கைகள் குறித்து வேலையளிப்பவர்கள்/ஆள்சேர்ப்பு முகமைகள் மற்றும் கப்பல் இயக்குபவர்களிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெற வேண்டும்.
வேலைவாய்ப்பு நிபந்தனைகள் சர்வதேச கடல்சார் தரநிலைகளுக்கு இணங்குவதையும், அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை, வெளியேற்றம், தாயகம் திரும்புதல் மற்றும் இழப்பீடு ஆகியவற்றிற்கான போதுமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இந்தியர்கள் தங்கள் பயணத் திட்டங்கள் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்குமாறும், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தூதரக உதவி தேவைப்படும் இந்தியர்கள் அப்பகுதியில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது துணைத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் ஐந்து இந்தியர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.