பெங்களூரு: 2024 மக்களவைத் தேர்தல் குறித்து கர்நாடக அரசு நடத்திய சர்வேயில், 83% க்கும் அதிகமானோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். இவிஎம் இயந்திரங்கள் மீது காங்கிரஸ் கேள்விகளை எழுப்பும் நிலையில், இந்த சர்வே முடிவுகள் அக்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசால் நடத்தப்பட்ட 2024 மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு சர்வே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீது பொதுமக்களுக்கு வலுவான நம்பிக்கை இருப்பதைக் காட்டியுள்ளது.
கர்நாடக அரசு நடத்திய இந்த கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 83.61% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்று நம்புவதாகக் கூறியுள்ளனர். இவிஎம் இயந்திரங்களுக்கு ஆதரவாக கூறியவர்களில் 69.39% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன என்றும், 14.22% பேர் அவை உறுதியாக நம்பிக்கைக்கு உரியது என்றும் ஒப்புக்கொண்டனர்.
இந்தக் கணக்கெடுப்பு பெங்களூரு, பெலகாவி, கலபுரகி மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் உள்ள 102 சட்டமன்றத் தொகுதிகளில் 5,100 பேரிடம் நடத்தப்பட்டது. இது கர்நாடக அரசால், தலைமைத் தேர்தல் அதிகாரி வி. அன்புகுமார் மூலம் நடத்தப்பட்டது.
கலபுரகியில் அதிகபட்சமாக 83.24% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்பதை ஒப்புக்கொண்டனர். மைசூருவில் 70.67% பேர், பெலகாவியில், 63.90% பேர், பெங்களூருவில் 63.67% பேர் நம்பகமானவை என ஒப்புக்கொண்டனர். நடுநிலையான கருத்துக்கள் பெங்களூரில் 15.67% ஆக அதிகமாக இருந்தன, இது மற்ற இடங்களை விட கணிசமாக அதிகமாகும்.
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு மற்றும் வாக்குத் திருட்டு நடந்ததாகக் கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசு மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை மீண்டும் மீண்டும் தாக்கி வருகிறார். இந்தச் சூழலில், இந்த சர்வே முடிவுகள் அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்வே குறித்து பேசிய கர்நாடக பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், “பல ஆண்டுகளாக, ராகுல் காந்தி ஒரு கதையைச் சொல்லி நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமற்றவை. தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்று கூறுகிறார்.
ஆனால் கர்நாடகா இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையைச் சொல்லியுள்ளது. மக்கள் தேர்தல்களை நம்புகிறார்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள், மேலும் இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை நம்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த ஒரு அறை.” என்று தெரிவித்தார்.