நாக்பூர்: “இந்தியாவையும், இந்துக்களையும், சங்கத்தையும் பிளவுபடுத்த சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிலைமை மாறிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள்; ஆனால் அப்படி ஒருபோதும் நடந்ததில்லை” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி, விஜயதசமி உற்சவத்தில் உரையாற்றிய மோகன் பகவத், “ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிலைமை மாறிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள்; ஆனால், அப்படி ஒருபோதும் நடந்ததில்லை. தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்துபவர்கள், எப்போதும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட சில கைப்பாவைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்போது இந்தியா அவர்களின் முதன்மை இலக்காக உள்ளது.
இந்தியாவை பலவீனப்படுத்த விரும்பும் தீய சக்திகள், இந்தியாவையும், இந்துக்களையும், சங்கத்தையும் சிதைப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். இதைத்தான் அவர்கள் ‘சிதைக்கும் செயல்’ (dismantling) என்று அழைக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவும் கிடைக்கிறது. இவர்களைப் போன்ற மனநிலை கொண்டவர்களும், அதிகாரத்தின் மீது அதீத தாகம் கொண்டு, விவேகமற்ற முறையில் செயல்படும் லட்சியம் கொண்ட தலைவர்களும் இவர்களுக்குத் துணையாக இருக்கிறார்கள்.
இப்போது இந்தியா ஓர் உறுதியான கொள்கையைப் பின்பற்றி வருகிறது; நாட்டின் தலைமையும் அதே உறுதியுடன் நாட்டை வழிநடத்தி வருகிறது. இதனுடன், இந்தியாவின் இளம் தலைமுறையினரிடையே தேசபக்தி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இத்தகைய பிளவுபடுத்தும் செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் ஜனநாயக நாட்டில் சமூகச் சிக்கல்களும், போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. இத்தகைய சிக்கல்களால்தான் மக்கள் இயக்கங்கள் உருவாகின்றன; ஜனநாயகத்தில் போராட்டங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், போராட்டங்கள் தீர்வுகளைக் காண்பதற்காக இருக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் குழுவாக இருந்தாலும், அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டச் செயல்படும் அரசு நிர்வாகமாக இருந்தாலும், அரசியல் தலைவர்களாக இருந்தாலும், நமது செயல்பாடுகளால் சமூகத்திற்குள் கருத்து வேறுபாடுகளையோ, வெறுப்பையோ அல்லது பிளவையோ ஏற்படுத்திவிடக் கூடாது.
நமது உணர்வுகள் எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், நமது அரசியலமைப்பு சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மற்றும் கண்ணியமான பேச்சு, நடத்தைக்கான நெறிமுறைகளுக்கு உட்பட்டே நமது செயல்கள் அமைய வேண்டும். மலிவான புகழுக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் ஆசைப்பட்டு, நமது விவேகத்தையும் நல்லெண்ணத்தையும் இழந்துவிடக் கூடாது” என்றார்.