விசாகப்பட்டினம்: திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு தொடர்பான வழக்கில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத் துறை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவத்தில் அவருக்கு நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இல்லை என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப் பத்திரிகையில், திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமலாக்கத் துறை கூறியுள்ளதுடன், இந்த வழக்கில் அவரை குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கவில்லை.
முன்னதாக, திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான முறைகேடுகளில் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இல்லை என்பதை ஆந்திரப் பிரதேச குற்றப் புலனாய்வுத் துறையும் உறுதிப்படுத்தியிருந்தது. வழக்கை வாபஸ் பெற அனுமதித்தபோது, விஜயவாடா ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றமும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.
திறன் மேம்பாட்டு வழக்கு காரணமாகவே சந்திரபாபு நாயுடு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ராஜமுந்திரி மத்திய சிறையில் 53 நாட்கள் இருந்த அவருக்கு அக்டோபர் 31-ல் பிணை வழங்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி நிதி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்த சந்திரபாபு நாயுடு, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாகக் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.