டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி
புதுடெல்லி: டெல்லியில் நிலப்பிரபுத்துவ அமைப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்திக்க உள்ளார். மம்தா பானர்ஜியின் வருகையை அடுத்து, டெல்லியில் ஹெய்லி சாலையிலும், சாணக்கியாபுரியிலும் உள்ள மேற்கு வங்க மாநில விருந்தினர் இல்லங்களுக்கு வெளியே காவல்துறை பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி எம்.பி ஆகியோர் தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 பேர் கொண்ட குழு, ஞானேஷ் குமாரை சந்திக்க திட்டமிட்டுள்ளது.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘டெல்லி காவல்துறை என்ன செய்கிறது என்று பாருங்கள். ஒரு பேருந்து முழுக்க காவல்துறையினர் தற்போது இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு ஒரு சந்திப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
உயிரோடு இருக்கும் பலர் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பெயர் நீக்கப்பட்ட பல குடும்ப உறுப்பினர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாங்கள் வரும்போது டெல்லி பயப்படுகிறது. நாங்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கான மக்களை இங்கே கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், சிறப்பு தீவிர திருத்தத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 50 பேரை நாங்கள் இங்கே கொண்டு வந்துள்ளோம். டெல்லி காவல்துறையால் யாரையும் பாதுகாக்க முடியாது. டெல்லியில் இன்னமும் நிலப்பிரபுத்துவ அமைப்பு நடைமுறையில் உள்ளது’’ என கூறினார்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘‘மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி தலைமையில் 15 பேர் கொண்ட குழு, மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒருதலைபட்சமான, தன்னிச்சையான, பாகுபாடு நிறைந்த, அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்பாடு தொடர்பான எங்களின் கடுமையான கவலையை முறையாக பதிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.