புதுடெல்லி: மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறையின் 70-வது நிறுவன தின விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, வருவாய்த் துறைச் செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, அமலாக்கத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமலாக்கத் துறை இயக்குனர் ராகுல் நவீன் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த நிகழ்ச்சி கொண்டாட்டத்துக்கு மட்டுமல்லாமல், சுய பரிசோதனை செய்யவும் எதிர்காலத்துக்கான பாதையை வகுக்கவும் முக்கியமானது. வங்கி மோசடிகள், நிறுவன முறைகேடுகள், ரியல் எஸ்டேட் மோசடிகள் போன்றவற்றின் மீதே அமலாக்கத் துறையின் கவனம் உள்ளது.
தற்போது, கிரிப்டோ மோசடி, சைபர் குற்றம், தீவிரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. இந்த குற்றங்களை எதிர்கொள்ள அமலாக்கத் துறை தனது அணுகுமுறையை மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் வலைப் பின்னல்களைப் பொருளாதார ரீதியாக முடக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
உதாரணமாக, செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில், தீவிரவாதம் மற்றும் உளவு நடவடிக்கைகளுடன் அதன் தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் அமலாக்கத் துறை விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் அமலாக்கத் துறை 155 கூடுதல் புகார்கள் உட்பட மொத்தம் 812 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 2 மடங்கு அதிகம்.
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில், இதுவரை 94 சதவீதக் குற்றங்கள் நிரூபணமாகி உள்ளன. தற்போது சுமார் 2,400 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீதான தீர்ப்புகள் விரைவில் வெளியாகும். இதுவரை மொத்தம் ரூ.2,36,017 கோடி மதிப்பிலான சட்டவிரோதச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.81,422 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. இது முந்தைய ஆண்டை விட 170 சதவீதம் அதிகம்.
மேலும், வங்கிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்குவோர் போன்ற பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ரூ.63,142 கோடி திரும்ப ஒப்படைத்துள்ளது. பிஏசிஎல் லிமிடெட் மோசடி வழக்கில், முதலீட்டாளர்களுக்கு ரூ.15,581 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. உதய்பூரைச் சேர்ந்த மற்றொரு ரியல் எஸ்டேட் வழக்கில், இருநூற்றுக்கும் அதிகமான வீடுகளை வாங்குவோருக்கு அவர்களின் சொத்துக்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
இதுவரை, எப்இஒஏ (தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம்) கீழ் 54 நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களில் 21 பேர் ‘தப்பி ஓடிய குற்றவாளிகள்’ என்று அறிவிக்கப்பட்டு, ரூ.2,178 கோடி மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.