அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க், பிரதமர் மோடி
புதுடெல்லி: ஈரான் போர் நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையே நடைபெற்ற தொலைபேசி பேச்சின் போது, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் பங்கேற்றார் என்று வெளியான தகவலை மத்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் கடந்த 24-ம் தேதி தொலைபேசியில் பேசினார். இருவரும் ஈராக் போர் நிலவரம் குறித்து பேசினர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘மேற்காசிய நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், என்னுடன் தொலைபேசியில் பேசினார். இப்பகுதியில் விரைவில் அமைதி ஏற்பட வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தி திறந்து விடப்பட வேண்டும் என இந்தியா விரும்புவதாக தெரிவித்தேன். இப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டோம்’’ என கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலில், ‘‘ஈரான் போர் நிலவரம் குறித்து அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்றார். போர் நிலவரம் குறித்து இருநாட்டு தலைவர்கள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில், தனியார் நபர் பங்கேற்பது வழக்கத்துக்கு மாறானது’’ என்று தெரிவித்திருந்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நேற்று கூறுகையில், ‘‘இந்தக் கதையை நாங்கள் பார்த்தோம். கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இருவர் மட்டும்தான் தொலைபேசியில் பேசினர். அப்போது வேறு யாரும் இடம்பெறவில்லை’’ என்றார்.