புதுடெல்லி: செலவுகளை பிரதிபலிக்கும் கட்டணம் என்ற கருத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் மனோகர் லால் நேற்று தெரிவித்தார்.
நாட்டில் மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்கள் (டிஸ்காம்ஸ்) பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மேலும், மின்சார உற்பத்தி, விநியோகம், மக்களுக்கு வழங்கப்படும் மானியம், விநியோகத்தின் போது மின்சார இழப்பு போன்ற பல காரணங்களால் டிஸ்காம்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, அனைத்து செலவுகளையும் பிரதிபலிக்கும் கட்டணம் என்ற கருத்தில், மின்சார சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக மின்சார விநியோகத்தில் தனியார் துறைக்கு அனுமதி அளித்து போட்டியை அதிகரிப்பது, அதன் மூலம் நுகர்வோர் அவர்களுக்கு விருப்பப்பட்ட விநியோக நிறுவனத்தை தேர்வு செய்வது உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் உள்ளது. இந்த மசோதா கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட இருந்தது.
ஆனால், மாநிலங்களின் கடும் எதிர்ப்பால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. அரசு துறைகளின் நிதிச்சுமை, மாநிலங்களின் அதிகாரம் குறைதல், இலவச மின்சார திட்டங்களுக்கு பாதிப்பு போன்ற காரணங்களால் பல மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும், ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செலவுகளை பிரதிபலிக்கும் கட்டணம் என்ற கருத்தில் மின்சார திருத்த சட்டமசோதா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும்.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் டிஸ்காம்ஸ் நிறுவனங்களின் நஷ்டம் குறைக்கப்படும். இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சுமூகமாக நிறைவேற்ற, அனைத்துத் தரப்பினரிடம் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிப்போம் என்று மத்திய மின்சார துறை அமைச்சர் மனோகர் லால் நேற்று தெரிவித்தார். ‘அகில இந்திய டிஸ்காம்ஸ் சங்கம்’ நடத்திய மாநாட்டில் மத்திய அமைச்சர் மனோகர் லால் நேற்று இந்தத் தகவலை தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய மின்சார கொள்கை 2026 பற்றி தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.