இந்தியா

மும்பை உட்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

வெற்றி மயிலோன்

மும்பை: மும்பை, புனே உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநாகராட்சியான மும்பை மாநகராட்சியை கைப்பற்றுவதற்காக, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், மீண்டும் ஒன்றுசேர்ந்த உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே சகோதரர்கள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், மும்பை மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.

மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளில் உள்ள 893 வார்டுகளில் இருக்கும் 2,869 இடங்களுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7.30 மணிக்குத் தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும். மொத்தம் 3.48 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர். 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 16 அன்று நடைபெறும்.

கடைசியாக 2017ல் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவுக்குப் பிறகு நடைபெறும் முதல் மும்பை மாநகராட்சித் தேர்தல் இது.

ஆண்டுக்கு ரூ.74,400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டைக் கொண்ட மும்பை மாநகராட்சியில், நான்கு ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 227 இடங்களுக்கு 1,700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலைக் கண்காணிப்பதற்காக மும்பை முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்கும் 3.48 கோடி வாக்காளர்களில், 1.81 கோடி பேர் ஆண்கள், 1.66 கோடி பேர் பெண்கள், மற்றும் 4,596 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இந்த தேர்தலுக்கான 39,092 வாக்குச்சாவடிகளில், 3,196 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் நடைபெறும் மாநகராட்சித் தேர்தல்கள் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (ஜனவரி 15) மூடப்பட்டுள்ளன. தேர்தல் நாளை முன்னிட்டு, தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) உட்பட இரண்டு முக்கிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் இன்று நிறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT