சென்னையில்  நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே

 
இந்தியா

பிரதமர் மோடியை ‘பயங்கரவாதி’ என குறிப்பிட்ட விவகாரம் - கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மோகன் கணபதி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என குறிப்பிட்டது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நேற்று (ஏப்.21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெரியார், அம்பேத்கர், அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்களுக்கு எதிரானது அதிமுக - பாஜக கூட்டணி. அண்ணாதுரையின் பெயரை வைத்துக்கொண்டு அதிமுக எப்படி பிரதமர் மோடியுடன் கைகோக்க முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி” என தெரிவித்திருந்தார்.

எந்த அடிப்படையில் பிரதமரை பயங்கரவாதி என குறிப்பிட்டீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “பிரதமர் மோடி எப்போதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துபவராக இருக்கிறார். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் அவரது கைகளில் உள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்திலும்கூட அதை அவர் தனது கைகளில் எடுத்துக்கொள்ள விரும்புகிறார். அவர் மக்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு அச்சுறுத்தலை அளிக்கிறார் என்பதாலேயே அப்படி கூறினேன். அவர் ஒரு பயங்கரவாதி என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்தை சுட்டிக்காட்டி அவர் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது.

டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்ற பாஜக மூத்த தலைவர்களான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவசாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர், மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு தொடர்பாக புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “பாஜகவின் உயர்மட்டக் குழு ஒன்று, மிகுந்த வருத்தத்துடனும் கோபத்துடனும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை இன்று சந்தித்தது. பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதி என கார்கே அழைத்தது வெறும் ஒரு கருத்து மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த தேசத்துக்கும் இழைக்கப்பட்ட ஒரு மிகக் கடுமையான அவமதிப்பாகும்.

இத்தகைய இழிவான நடத்தையை ஒருபோதும் சாதாரணமாகக் கருதவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது. இது குறித்து உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினோம்” என தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்த கார்கேவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “காங்கிரஸ் கட்சி தனது நடத்தையில் நாள்தோறும் புதிய தரம் தாழ்ந்த நிலையை எட்டி வருகிறது. பொது விவாதங்களின் தரத்தை வீழ்ச்சியடையச் செய்வதில் அது தனது சொந்த சாதனையை தொடர்ந்து முறியடித்து வருகிறது.

இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது ஒழுக்கத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என அழைத்ததன் மூலம், நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார்.

நாட்டின் முதன்மைத் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பு, அவரை நேசித்து ஆதரிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். கடந்த 12 ஆண்டுகளில் தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திய மோடியைப் போன்ற ஒரு தலைவரை பயங்கரவாதி என்று அழைப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் மோடியை அவதூறாகப் பேசுகிறதோ அப்போதெல்லாம் நாட்டு மக்களே அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்கள். இம்முறையும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக தலைவர்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையம் தனது பேச்சு குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கக் கோரி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT