‘ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்’ - மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

‘ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்’ - மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஐ-பேக் அமைப்பின் இணை நிறுவனர் பிரதீக் ஜெயினின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு சென்று ஆவணங்களை எடுத்துச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் செயல் ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தக் கூடியது என உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

தொழிலதிபர் அனுப் மஜி கடந்த 2020-ம் ஆண்டில் பணமோசடி மற்றும் நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ஐ-பேக் அமைப்பின் இணை நிறுவனரான பிரதீக் ஜெயினின் கொல்கத்தா இல்லத்தில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்தியது. அப்போது, அங்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய ஆவணங்களை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அமலாக்கத் துறை, இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஏப். 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியது: விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ஒரு முதல்வர் இவ்வாறு நடந்து கொண்டது ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல். அரசியல் சாசனத்தை வகுத்தளித்த அம்பேத்கரோ, மற்றவர்களோ, இந்த நாட்டில் ஒரு நாள் பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவரே விசாரணை நடைபெறும் அலுவலகத்துக்குள் நேரடியாக நுழைவார் என்ற சூழலை கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த வழக்கு மிகவும் அசாதாரணமானது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் யதார்த்தங்களை நாம் கண்களை மூடிக்கொண்டு புறக்கணிக்க முடியாது. மாநிலத்தில் நிலவும் சூழலை நாம் கவனத்தில் இருந்து விலக்கிவிட முடியாது.

சில கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நீங்கள் எங்களை உள்ளாக்காதீர்கள். இது சாதாரண வழக்கு அல்ல. முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களைக் கொண்ட ஓர் அசாதாரண வழக்கு. சமூக அரசியல் யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 29-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

‘ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்’ - மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
‘பிரதமர் மோடியை ‘பயங்கரவாதி’ என கூறிய கார்கே மீது நடவடிக்கை எடுப்பீர்’ - தேர்தல் ஆணையத்திடம் பாஜக முறையீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in