புதுடெல்லி: தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்யுமாறு தலைமைச் செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையர்கள் செய்து வருகின்றனர். தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் முக்கிய அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நம்பிக்கையில்லா
தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். இதனைப் பின்பற்றி, தற்போது அந்தந்த மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த இடமாற்ற உத்தரவு குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள்: குறிப்பாக, தேர்தல் பணிகளுடன் நேரடி தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய்த் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த இடமாற்றப் பட்டியலைத் தயார் செய்து உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர் நம்பிக்கை: எந்தவொரு அதிகாரியும் அரசியல் ரீதியாக ஒரு சார்பாகச் செயல்படுவதைத் தவிர்க்கவும், வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பணியிட மாற்றம் செய்யப்படும் அதிகாரிகளுக்குப் பதிலாக புதிய அதிகாரிகளை நியமிக்கும் போது அவர்களின் கடந்த கால தேர்தல் பணி அனுபவங்களையும் கருத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.