உமர் காலித் | கோப்புப் படம்

 
இந்தியா

உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கக் கோரி அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வலியுறுத்தல்

மோகன் கணபதி

புதுடெல்லி: 2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உமர் காலித்துக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர், அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின்படி நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2020-ல் வட கிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக உமர் காலித் கைது செய்யப்பட்டார். 2020, செப்டம்பரில் கைது செய்யப்பட்ட அவர் மீது, சதி, கலவரம், சட்டவிரோதமாகக் கூடுதல் மற்றும் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் (UAPA) போன்ற குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன. அவரது ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், உமர் காலித்துக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாட்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். டிச. 30, 2025 தேதியிட்ட அந்த கடிதத்தில், “உமர் காலித்துக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளாக ஜாமீன் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமத்துவத்துக்கு முரணாக இந்த சட்டம் இருக்கலாம்.

நியாயமான காலத்துக்குள் விசாரணையை பெறுவதற்கான அல்லது விடுவிக்கப்படுவதற்கான தனிநபர்களின் உரிமைகளை இந்தியா நிலைநாட்ட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகள் என்று கருதப்பட வேண்டும். உமர் காலித் மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள் சர்வதேச தரத்துடன் இருப்பதை உறுதி செய்வதோடு, எடுக்கப்படும் நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கடிதத்தை, டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் ஆணையத்தின் இணைத் தலைவரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜிம் மெக்கவரன் பகிர்ந்துள்ளார்.

இந்த கடிதத்தில், அவர் கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜேமி ரஸ்கின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால், ஜான் ஷாகோவ்ஸ்கி, லாயிட் டோகெட், ரஷிதா த்லைப், கிறிஸ் வான் ஹோலன், பீட்டர் வெல்ச் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

டிசம்பர் மாத தொடக்கத்தில் உமர் காலித்தின் பெற்றோரை தாங்கள் சந்தித்ததாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT