வீடியோவால் அம்பலமான கிட்னி திருட்டு விவகாரம்: திருச்சி மருத்துவருக்கு மகாராஷ்டிர போலீஸ் வலை!

சிறுநீரக மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயி ரோஷன் குடே

சிறுநீரக மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயி ரோஷன் குடே

Updated on
2 min read

புதுடெல்லி: சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ராஜரத்தினம் கோவிந்தசாமி தலைமறைவாக உள்ளதாக மகாராஷ்டிரா காவல் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் சந்திரபூரைச் சேர்ந்த இளம் சிறு விவசாயியான ரோஷன் குடே என்பவர் கடந்த மாதம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் இருந்து தான் பெற்ற ரூ. 1 லட்சம் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்றதாகவும், ஆனாலும், தான் வாங்கிய தொகை வட்டியுடன் ரூ. 70 லட்சத்துக்கும் அதிகமாகிவிட்டதாகவும் கூறி இருந்தார்.

இதையடுத்து, சந்திரபூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், கிட்னியை விற்கத் தூண்டும் முகவர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு இடையே இருந்த கூட்டு சதி அம்பலமாகி உள்ளது.

மேலும், டெல்லி மற்றும் திருச்சிக்கும், கம்போடியாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு ஏழை மக்களிடம் இருந்து சட்டவிரோதமாக கிட்னி திருடப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 'தி இந்து' செய்தியாளரிடம் பேசிய சந்திரபூர் காவல் கண்காணிப்பாளர் மும்மகா சுதர்ஷன், "சந்திரபூர் விவசாயி வெளியிட்ட வீடியோவை அடிப்படையாகக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை காவலில் எடுத்து விசாரித்தோம்.

இந்த விசாரணையில், ஏழை இளைஞர்களை சில லட்சம் பணத்துக்காக சிறுநீரகங்களை விற்கத் தூண்டிய மோசடிக் கும்பலை நாங்கள் கண்டறிந்தோம். நாங்கள் இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் ஆறு பேர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள். இரண்டு பேர் பாதிக்கப்பட்டவர்களைத் தூண்டிய முகவர்கள்.

மேலும், டெல்லியில் உள்ள ஹெல்தி ஹியூமன் கிளினிக்ஸைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங் என்ற மருத்துவரை நாங்கள் கைது செய்தோம். ஆனால், அவருக்கு ஜாமின் கிடைத்துவிட்டது. தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ராஜரத்தினம் கோவிந்தசாமி தலைமறைவாக இருக்கிறார். நாங்கள் அவரை தேடி வருகிறோம். நாங்கள் அவரது மருத்துவமனையிலும் சோதனை நடத்தினோம்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன. தங்கள் சிறுநீரகங்களை விற்ற எட்டுக்கும் மேற்பட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே, மேலும் ஐந்து பேருடன் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முகவர்களாக செயல்பட்ட ஹிமான்ஷு பரத்வாஜ், கிருஷ்ணா ஆகியோர், ஏற்கனவே தங்கள் சிறுநீரகங்களை விற்றுள்ளனர். இந்த மோசடி கும்பலில் உள்ள பல முகவர்கள், சிறுநீரக தானம் செய்தவர்கள். ஹிமான்ஷு பரத்வாஜ் ஆகிய இருவரும் தங்கள் சிறநீரகத்தை தானம் செய்த பிறகு மற்றவர்களை தூண்டும் ஏஜண்டுகளாக மாறி உள்ளனர். இவர்கள், ஏழைகள், விளிம்புநிலை விவசாசிகள் மற்றும் இளைஞர்களை சிறுநீரகங்களை விற்க தூண்டும் ஒரு கும்பலை உருவாக்கி உள்ளனர்.

இந்த மோசடியின் பின்னணியில் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் உள்ளன. இந்த இளைஞர்கள், டெல்லி, திருச்சி அல்லது கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளிகளின் மொபைல் மற்றும் தொழில்நுட்ப தரவுகளை காவல்துறை பகுப்பாய்வு செய்துள்ளது. முகவர்கள், தானம் செய்பவர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த வலையமைப்பு கம்போடியா வரை நீண்டுள்ளது.

சிறுநீரகத்தை தானமாகப் பெறுபவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை வசூலிக்கப்பட்ட நிலையில், தானம் கொடுத்தவர்களுக்கு அதில் 10% மட்டமே கிடைத்துள்ளது. அதாவது, சிறுநீரகத்தை தானம் செய்த இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை மட்டுமே கிடைத்துள்ளது. மருத்துவர் ரவீந்தர் பால் சிங் தோராயாயமாக ரூ. 10 லட்சம் பெற்றுள்ளார். டாக்டர் ராஜரத்தினம் கோவிந்தசாமி, சிகிச்சை மற்றும் மருத்துவமனை ஏற்பாடுகளுக்காக ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளார். ஏஜெண்டுகளான ஹிமான்ஷு பரத்வாஜ், கிருஷ்ணா ஆகியோர் சுமார் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

அப்பாவி ஏழை இளைஞர்களை ஏமாற்றி அவர்களின் சிறுநீரகங்களை சட்டவிரோதமாக பெற்ற விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

<div class="paragraphs"><p>சிறுநீரக மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயி ரோஷன் குடே</p></div>
இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் 1,000 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in