மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜுன் மாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் கோபமடைந்த நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 14-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூக வகுப்பு நிறுவனமாக ஐ-பேக் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அண்மையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தரவுகளை தவறாகப் பயன்படுத்துவதற்கும், பரப்புவதற்கும் தடை விதிக்கவும், திருப்பித் தரக் கோரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்தச் சோதனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தங்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அமலாக்கத் துறையும் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அமலாக்கத் துறை இடையேயான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுவ்ரா கோஷ் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐ-பேக் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, இருதரப்பு வழக்கறிஞர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் வெளியேற நீதிபதி பலமுறை உத்தரவிட்டும் அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து, வழக்கோடு தொடர்பில்லாத வழக்கறிஞர்கள் 5 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும் எனவும், இல்லையென்றால் நான் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகும் நீதிமன்றத்தில் ஒழுங்கு திரும்பவில்லை.
தனது எச்சரிக்கையும் மீறி நீதிமன்றத்தில் கூச்சல் குழப்பம் அதிகமாக இருந்ததால் கோபமடைந்த நீதிபதி சுவ்ரா கோஷ் வழக்கு விசாரணையை ஜனவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரம் உள்ளது: மம்தா
அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் என்னிடம் உ ள்ளது. நிலக்கரி ஊழல் குறித்த உண்மைகளை வெளியிடுவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நிலக்கரி ஊழலில் இருந்து கிடைத்த அனைத்துப் பணமும் இறுதியில் அமித் ஷாவிடம் தான் சென்றடைந்துள்ளது. அந்த நிதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஜெகந்நாத் சர்கார் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் மூலமாக அனுப்பப்பட் டுள்ளது.
நான் வகிக்கும் பதவிக்கு மரியாதை அளித்து இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால், ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் எனக்கும் எனது அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நிலக்கரி ஊழலில் உள்ள தொடர்பு குறித்த விவரங்களை வெளியிடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைக் கண்டித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா ஜாதவ்பூரிலிருந்து ஹஸ்ரா சந்திப்பு வரை ஒரு மாபெரும் கண்டனப் பேரணியை நேற்று நடத்தினார்.