புதுடெல்லி: கோவா மாநில எஸ்ஐஆர் பணியின்போது 97 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அவர்கள் உரிய ஆவணங்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு 97 பேரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில ஆணைய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் இசிஐநெட் மென்பொருள் கட்டமைப்பின்படி நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மாநில அதிகாரிகளால் மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியவில்லை. இதுதொடர்பாக கோவா தேர்தல் ஆணையம் தரப்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் 8 முறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் 97 பேரின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் ஆங்கில ஊடக செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஆங்கில ஊடகத்தின் புலனாய்வு செய்திக்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை.
கோவா வாக்காளர் பட்டியலில் 97 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு தெளிவான விளக்கம் இல்லை. ஆங்கில ஊடக செய்தியில் எழுப்பப்பட்டுள்ள 14 கேள்விகளுக்கும் தெளிவான, வெளிப்படையான பதிலை தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும். மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய இசிஐநெட் மென்பொருளை நீக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.