கோப்புப்படம்
புதுடெல்லி: இந்தியாவில் போதை மருந்து கடத்தல் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் விவேக் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) 68-வது நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறியதாவது: போதைப் பொருள் கடத்துபவர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு கூரியர், இ-காமர்ஸ் நிறுவனங்களை ஏமாற்றி போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கடத்தல்காரர்கள் கடல்வழியாகவும் சிந்தடிக் போதைமருந்துகளை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர். எனவேதான், இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் என்பது இன்னும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.
வளர்ந்து வரும் போதை மருந்து கடத்தல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடத்தல் முறைகளை முன்கூட்டியே அறிய மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளைப் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்.
65 கிலோ கொகைன்: கடந்த ஆண்டில் மட்டும் 65 கிலோ கொகைன், 225 கிலோ மெத்தபெட்டமைன், 9 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைமருந்து கடத்தல் நெட்வொர்க்கை அழிக்கும் பணியில் டிஆர்ஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு விவேக் சதுர்வேதி தெரிவித்தார்.