புதுடெல்லி: பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாடகை வாகனங்களில் ஓட்டுநர்களின் பெயர், புகைப்படம் அடங்கிய பலகை இருப்பதை உறுதி செய்ய டெல்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் அடுத்தடுத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் அமர்வில் இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டெல்லியில் உடனடியாக காவல்துறையின் ரோந்து பணியை அதிகரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் குற்றச்செயல் அதிகம் நடைபெறக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கேப்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களை கட்டாயம் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் பெயர், புகைப்படம் அடங்கிய பலகை பயணிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், அனுமதியின்றி செயல்படும் மதுபானக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதமாக வாகனங்களை வேறு ஓட்டுநர்களிடம் ஒப்படைப்பதை தடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படாவிட்டால் டெல்லி காவல் ஆணையர் மற்றும் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.