புது டெல்லி: ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி நடத்தவுள்ள ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் செல்வோம்) பேரணிக்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாரதிய ஜனதா கட்சியை ‘டபுள் ஜூரோ’ அரசாங்கம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்ட மேலவை தேர்தலில், பாஜக ஆறு இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. டெல்லி பேரணிக்கு முன்பு இந்த முடிவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய அகிலேஷ் யாதவ், “பாஜகவின் தேர்தல் முழக்கமான “டபுள் இன்ஜின்” என்பது இப்போது “டபுள் ஜீரோ” ஆகிவிட்டது. உத்தரப் பிரதேச முதலமைச்சரே 1.27 கோடி வாக்குகள் குறைந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இது அவருக்கு எப்போது நினைவுக்கு வந்தது? எம்.எல்.சி தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்தபோதுதான்.
‘டபுள் இன்ஜின்’ என்று பெருமை பேசியவர்கள், இறுதியில் ‘டபுள் ஜீரோ’வைத்தான் பெற்றுள்ளனர். அதுமட்டுமல்ல, தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மறுவாக்கு எண்ணிக்கையையும் நடத்தினர்.
எனவே சிந்தித்துப் பாருங்கள்: ‘டபுள் இன்ஜின்’, ‘டபுள் ஜீரோ’ மற்றும் ஒரே தேர்தலில் ‘இரட்டைத் தோல்வி’ அடைந்துள்ளது. இவ்வளவு நடந்த பிறகு, இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? அந்த 1.27 கோடி வாக்குகள் இந்துக்களுடையவை அல்லவாம்” என்று விமர்சித்தார்.