அமராவதி: செல்போன்களை பார்க்கும் அளவுக்கு கூட கோப்புகளை பார்க்க நேரம் இல்லையா? என மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரிகளை சாடினார்.
அமராவதியில் 8-வது மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. 2-வது நாளாக நேற்று நடந்த மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மக்களின் பிரச்சினைகள், அதுதொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் இந்த வேளையில், சில துறைகளைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் இந்த கூட்டத்துக்கு வராமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அவர்களுக்கு என்ன தைரியம்? அவர்கள் குறித்து சம்மந்தப்பட்ட செயலாளர்கள் காரணங்களை விளக்கி எனக்கு பதில் அளிக்க வேண்டும். சில அதிகாரிகள் செல்போன்களை பார்க்க செலவிடும் நேரத்தை கூட கோப்புகளை பார்க்க செலவிடுவதில்லை. செல்போன்கள் இல்லாமல் சில மணி நேரம் கூட இருக்க முடியாத நிலையில் உள்ளீர்கள். ஒவ்வொரு துறையிலும் பல நாட்கள் கோப்புகள் தேங்கி கிடக்கின்றன. எதனால் கோப்புகள் தேங்குகின்றன.
இதேபோன்று அமைச்சர்களில் ராம்பிரசாத் ரெட்டி, கொல்லா ரவீந்திரா, கேஷவ் ஆகியோர் கோப்புகளை பரிசீலிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் புகார்கள் வருகின்றன.
நான் கூட கோப்புகளை பார்க்க அதிகபட்சம் 4 நாட்கள் வரை மட்டுமே நேரம் எடுத்து கொள்கிறேன். அனைத்து அமைச்சர்களும் கோப்புகளை உடனுக்குடன் பார்த்து அனுப்பி விடுங்கள். கோப்புகள் மேஜைகளை எவ்வளவு விரைவாக கடக்கிறதோ, அவ்வளவு விரைவாக அரசாட்சியும் நடக்கும். இல்லையேல் ஆமை வேகத்தில்தான் இந்த அரசு நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.