புதுடெல்லி: எதற்கும் கவலைப்பட வேண்டாம்; நான் உங்களுடன் இருக்கிறேன் என்று பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் மாற்று கட்சி எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி அளித்த காலை நேர சிற்றுண்டி விருந்து நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள், சிவசேனா(உத்தவ்) கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி.க்கள், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) 20 எம்.பி.க்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித்பவார் பிரிவு) 2 எம்.பி.க்கள் உட்பட 45 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் உங்களுக்கு எனது நன்றி. நாடாளுமன்றத்தின் வரலாற்றைப் படித்து, கற்று, புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும். நாடாளுமன்ற விவாதங்களில் நீங்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் உன்னத ஆலயமாகும். நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் அமளியால் புதிய எம்.பி.க்களுக்கு அவையில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எனக்குத் தெரியவந்துள்ளது.
இது உங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற வேண்டும். சமீபகாலமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் எனக்கு கவலை அளிக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. விவாதங்களுக்குத் தயாராக அவற்றை படித்து பயன்படுத்த வேண்டும். எம்.பி.க்கள் அவர்கள் சார்ந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற வேண்டும். மாநிலங்கள் முன்னேறினால் மட்டுமே நாடு முன்னேறும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு குடும்பம் போன்றது. நாங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். ஒவ்வொரு தனிநபரும் மதிக்கப்படுவார்கள். அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவன் மட்டுமல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நான் ஒருங்கிணைந்து இருக்கிறேன். கூட்டணியின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நான் உறுதுணையாக நிற்பேன். யாரும் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்த சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்.பி.க்கள் 6 பேரையும் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, நான் உங்களுடன் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு பிரதமர் உறுதியளித்தார்.