புதுடெல்லி: நாட்டில் மருத்துவர் - மக்கள் தொகை விகிதம் 1:811 ஆக உள்ளது என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலங்களவையில் இன்று ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, “நாட்டில் தற்போது 13,88,185 பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்களும், ஆயுஷ் மருத்துவ முறையில் 7,51,768 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களும் உள்ளனர்.
அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ முறைகளில் பதிவு செய்த மருத்துவர்களில் 80% பேர் தற்போது பயிற்சியில் இருப்பதாகக் கருதினால், நாட்டில் மருத்துவர் - மக்கள் தொகை விகிதம் 1:811 என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, நாட்டில் தற்போது மருத்துவக் கல்லூரிகள், இளங்கலை மற்றும் முதுகலை இடங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2014-ல் 387 ஆக மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 818 ஆகவும், இளங்கலை இடங்கள் 51,348-லிருந்து 1,28,875 ஆகவும், முதுகலை இடங்கள் 31,185-லிருந்து 82,059 ஆகவும் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “ பின்தங்கிய, கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில் மருத்துவர்களின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளில் 137 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
கிராமப்புற மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக குடும்ப தத்தெடுப்பு திட்டம் எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் என்பது கிராமங்களைத் தத்தெடுக்கும் மருத்துவக் கல்லூரிகளையும், இந்த கிராமங்களுக்குள் உள்ள குடும்பங்களை எம்பிபிஎஸ் மாணவர்கள் தத்தெடுக்கும் முறையையும் உள்ளடக்கியது” என்று தெவித்தார்.