குமாரசாமி | கோப்புப் படம்
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு எதிரான திமுகவின் வாதங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் செயல் என்றும், அக்கட்சியின் வாதங்கள் தென் மாநிலங்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு நேற்று கூட்டியது. இதில், அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார். யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார். மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இவற்றின் மீதான விவாதம் நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் இன்று பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சரமான எச்.டி.குமாரசாமி, “இந்த மசோதாக்கள் மீதான திமுகவின் வாதங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் செயல். திமுக முன்வைக்கும் வாதங்கள் தென் மாநிலங்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. இந்த மாபெரும் மாற்றத்தைக் கையாள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. அக்கட்சி மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டதோடு, இந்த மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தெரியாமல் தவிக்கிறது.
சுயமாகச் சிந்திக்கும் திறனையும், தனக்கென சொந்த வாதங்களை உருவாக்கும் ஆற்றலையும் இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, தற்போது திமுகவின் அரசியல் சொல்லாடல்களின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வருகிறது. சிறிது காலத்துக்கு முன்பு மு.க.ஸ்டாலினின் தம்பி என்று ராகுல் காந்தி தன்னை அழைத்துக் கொண்டார். ஆனால், தொகுதிப் பங்கீடு தொடர்பான மோதலுக்குப் பிறகு, அந்த 'அண்ணன்' தன் 'தம்பி' மீது கோபமாக இருப்பது போல் தெரிகிறது. அந்தத் 'தம்பியோ', இப்போதும் தன் 'அண்ணனிடமிருந்து' சிறிது பாசத்தை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “பெண்கள் இடஒதுக்கீடு சட்டத் திருத்தங்களை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் ஆற்றிய உரையில் பயன்படுத்திய "நாடாளுமன்ற மரபுக்கு எதிரான சொற்பிரயோகங்களை" நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
33 சதவீத இடஒதுக்கீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் சிதைக்கும் வகையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முயற்சிகள் அமைந்துள்ளன” என தெரிவித்தார்.