

புதுடெல்லி: பிரதமரை மந்திரவாதி என குறிப்பிடுவதா என ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமரை மந்திரவாதி என குறிப்பிட்டுப் பேசினார்.
“இந்த மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்கு தெரியும். அவர்கள் முட்டாள்கள் அல்ல. எதிர்க்கட்சிகள் இந்த அளவுக்கு கடுமையாக இதை எதிர்ப்பதால் இது நிறைவேறாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
ஆளும் கட்சியின் இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் ஒரு மந்திரவாதி. அந்த மந்திரவாதி நமது நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்ற விரும்புகிறார். பெண்களுக்கு ஆதரவானவர் என தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறார்.
அந்த மந்திரவாதிக்கும் ஒரு தொழிலதிபருக்கும் இடையே ஒரு கூட்டணி இருப்பதை அனைவரும் அறிவர். பாலாகோட் தாக்குதல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சிந்தூர் விவகாரம் ஆகியவற்றின் பின்னணியில் இருந்த அந்த மந்திரவாதி தற்போது திடீரென கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்” என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பாஜக எம்பியும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை மந்திரவாதி என குறிப்பிடுவது தரம் தாழ்ந்த பேச்சு. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இவ்வாறு பேசுவதை அனுமதிக்க முடியாது.
பிரதமரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனது தரம் தாழ்ந்த பேச்சுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்” என வலியுறுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “ராகுல் காந்தி கண்ணியத்துடன் பேச வேண்டும். நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு பிரதமரை தரம் தாழ்ந்து கிண்டல் செய்வது அடாவடித்தனமானது. இப்படி பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என கூறினார்.
ராகுல் காந்தி கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தொடர்ந்து பேச அனுமதிக்க முடியாது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.