புதுடெல்லி: மக்களவையில் தங்களை ‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு (டிஎம்சி) 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த தோல்விக்கு பிறகு அக்கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்து தொடர்ந்து பிளவு ஏற்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் மம்தாவின் முடிவுக்கு எதிராக 58 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோல் டிஎம்சி மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 பேர் தனி அணியாகப் பிரிந்தனர். இவர்கள் பாஜக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதுவரை 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு விலகியுள்ளனர். இந்நிலையில் டிஎம்சி அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவரான ஜெகதீஷ் சந்திர பர்மா பாசுனியா நேற்று கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே மக்களவை சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளோம். வரும் திங்கள்கிழமை சபாநாயகரை மீண்டும் சந்திக்க உள்ளோம்.
அப்போது உண்மையான டிஎம்சி நாடாளுமன்றக் குழுவாக நாங்கள் உரிமை கோருவோம். எங்கள் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்குமாறு சபாநாயகரிடம் கேட்போம்" என்றார்.
கூச் பெஹார் தொகுதி எம்.பி.யான பாசுனியா தங்கள் கடிதத்தில் 19 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறினார். என்றாலும் சபாநாயகருடனான இந்த சந்திப்புக்கு இதுவரை நேரம் இறுதி செய்யப்படவில்லை என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், 'ஆபரேஷன் தாமரை’ மூலம் பாஜக தங்களை கட்சி மாறச் செய்ய முயற்சிப்பதாக டிஎம்சி-யின் கீர்த்தி ஆசாத் எம்.பி. குற்றம் சாட்டினார்.
“டிஎம்சி.யை பலவீனப்படுத்த திட்டமிட்ட சதி நடக்கிறது. டிஎம்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் ராஜினாமா, மக்களவை அதிருப்தி எம்.பி.க்கள் - பாஜக தலைவர்கள் இடையிலான சந்திப்புகள் இதற்கான சான்றுகள்" என்று அவர் கூறினார்.