இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எந்தவொரு அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக பாஜகவை சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர் என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலின் வாதங்களைக் கேட்டறிந்த பின்னர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த கர்நாடகாவைச் சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையை நிறுத்தி வைக்குமாறு அந்த அமர்வு உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில், முந்தைய உத்தரவுகளின் அடிப்படையில் எந்தவொரு அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT